அவளின் குரல் | பெண்கள் பிரச்னையில் பெண்களையே எதிர்வரிசையில் நிற்கவைக்கும் அரசியலில்... இப்போது குஷ்பு!
பெண்களை மையப்படுத்தி நடக்கும் இந்த சமீபத்திய அரசியல் நகர்வுகளில், காலம் காலமாகப் பெண்கள் நடத்தப்பட்ட விதம் குறித்த அதிர்ச்சி ஒரு பக்கம் என்றால், இந்த அரசியலில் பெண்கள் பயன்படுத்தப்படும் விதம் குறித்த அதிர்ச்சி மறுபக்கம். குறிப்பாக, கண்டனங்கள் தெரிவிப்பது, போராட்டம் நடத்துவது, மன்னிப்புக் கேட்கச் சொல்வது என்று ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு அசைன்மென்ட்டுடன் வரும் குஷ்புவின் செயல்பாடுகள். 'மனுவில் பெண்கள் பற்றி இவ்வாறு எல்லாம் இழிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது' என்று திருமாவளவன் ஒரு நிகழ்ச்சியில் பேச, அந்த வீடியோ எடிட் செய்யப்பட்டு, 'திருமாவளவன் பெண்களைப் பற்றி இழிவாகப் பேசுகிறார்' என்று பரப்பப்பட்டது. பா.ஜ.க தலைமை அலுவலகத்தில் பத்திரிகையாளர்களிடம் குஷ்பு, 'பெண்களை மோசமாகச் சொல்வதுதான் உங்கள் கொள்கையா?' என்று கேட்கிறார். திருமாவளவன் தன் கருத்துகளாகப் பெண்களை இழிவுபடுத்திப் பேசுவதற்கும், 'மனுவில் இப்படி சொல்லப்பட்டிருக்கிறது' என்று சொல்வதற்குமான வித்தியாசம்கூட அவர் அறியவில்லையா? 'மனுவில் பெண்கள் பற்றி குறிப்பிடப்பட்டிருந்ததைத்தானே திருமாவளவன் சுட்டிக்காட்டினார்?' என்று செய்தியாளர்கள் கேட்க, 'அதில் பெண்களைக் கேவலப்படுத்தும் அளவுக்கு ஏதும் இல்லை' என்று அவர் தந்த பதில், முதிர்ச்சியின்மை. தமிழக பா.ஜ.க தலைவர்களே மனுவுக்கு எதிரான குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்க இயலாமல், மனு சித்தாந்தங்களிலிருந்து தங்களை விலக்கிக்கொள்ளும் நகர்வில் தஞ்சமடைந்திருக்கிறார்கள். 'மனுவில் கூறப்பட்டிருக்கும் கருத்துகளுக்கும் பா.ஜ.கவுக்கும் என்ன சம்பந்தம்?' என்கிறார் பா.ஜ.க மாநிலத் துணைத் தலைவர் வானதி சீனிவாசன். 'மனு நீதி எங்கு உள்ளது?' என்று அதன் இருப்பையே மறுக்கிறார் பா.ஜ.க மாநில தலைவர் எல். முருகன். ஆனால், பா.ஜ.கவில் இணைந்து அரை மாதமே ஆகும் குஷ்பு, 'மனுவில் பெண்களைக் கேவலப்படுத்தும் அளவுக்கு ஏதும் இல்லை' என்று, மனுவை முழுவதும் 'படித்துமுடித்தவராக' தீர்ப்பு சொல்கிறார்.